டீ விற்றவர்தான் இன்று நாட்டின் பிரதமராகி உள்ளார். டீ கடை வைத்திருந்தவர்தான் தமிழகத்தில் முதல்வராகவும், தற்போது துணை முதல்வராகவும் இருக்கின்றார். இவர்தகளைப்போல் நானும் அரசியலில் மிளிர்வேன் என்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த 43 வயதான அனில் குமார். டீ விற்று தற்போது மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் அனில் குமார் அம்மாநிலத்தில் அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
பொம்மனஹள்ளி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சதிஷ் ரெட்டியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார். வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். தான் நிச்சயமாக வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள அனில்குமாரின் சொத்து மதிப்பு ரூபாய் 339 கோடி என்று வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னிடம் பதினாறு கார்கள் உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட அனில்குமாரின் பெற்றோர் வறுமையில் வாடினர். அனில்குமார் சிறு வயதில் இருக்கும்போதே அவரது தந்தை காலமானார். குடும்பத்தின் வறுமையின் காரணமாக அவரது குடும்பம் பெங்களுருவுக்கு இடம்பெயர்ந்தது. சிறுவயதிலேயே டீ விற்பனையில் ஈடுபட்டார். 1990 ஆம் ஆண்டு டீ வியாபாரம் செய்தவர் காலப்போக்கில் தொழிலில் முன்னேற்றம் அடைந்து, ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கினார். தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். இவரும் பிரதமர் மோடி போல் அரசியலில் வெற்றியடைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...