Skip to main content

“ஒரு வாரத்தில் நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்” - மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Union Minister's says CAA will be enforced across the country in a week

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம், காக்த்வீப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டு இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திடீரென அமல்படுத்துவது நாட்டில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கலாம்.

சிஏஏ சட்டம் மதம், சமூகம், கொள்கைகளை மனதில் வைத்து அமலுக்கு வரும். இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அடுத்த 7 நாள்களில் நாடு முழுவதும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். நான் உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன்” என்று கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்