இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும். ஆனால் இந்தாண்டு இதுவரை நடைபெறவில்லை.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்திரி, விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க, சிறிய குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டவேண்டும் எனக் கடிதம் மூலமாக பிரஹலாத் ஜோஷிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இந்தமுறை நடத்தப்படாது என்றும், அதற்குப் பதிலாக அரசு பட்ஜெட் தொடரை முன்கூட்டியே நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது பற்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் விவாதித்ததாகவும், அவர்கள் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்யவே ஆதரவாக இருந்ததாகவும் கூறியுள்ள பிரஹலாத் ஜோஷி, கரோனா பரவல் காரணமாகவே, இக்குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் காங்கிரஸ், நாடாளுமன்ற கூட்டத் தொடரை ரத்து செய்வது தொடர்பாக தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் கொறடா ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரிடம் ஆலோசிக்கப்படவில்லை. வழக்கம் போல பிரஹலாத் ஜோஷி உண்மையிலிருந்து விலகிவிட்டார் எனத் தெரிவித்தார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி சசி தரூர், வீட்டிலிருந்தபடியே நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும் வசதி இல்லாதது ஏன்?. 543 எம்.பிக்களை கூட இணைக்க முடியாத அளவிற்கு, தகவல் தொழில்நுட்பத்துறையில் பின்தங்கி இருக்கிறோமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, பாராளுமன்ற ஜனநாயகத்தின் படுகொலை முழுமையாகிவிட்டது.
சிவசேனா கட்சியின் எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ”இந்திய அரசாங்கத்துக்குத் தேர்தல்கள் நடக்கலாம். தேர்தல் பேரணிகள் நடக்கலாம். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம். கல்லூரிகள் தேர்வுகளை நடத்தலாம். உணவு மற்றும் விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம். ஆனால், அவர்கள் மிகவும் ஆபத்தான இடமாகக் கருதுவது நாடாளுமன்றத்தைத்தான்” என விமர்சித்துள்ளார்.