ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் 5 வயது குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட, பெற்றோர், உறவினர்கள் இது குறித்து தீயணைப்பு துறை, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர், குழந்தை 15 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதை கண்டறிந்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் சுரேந்திர குமார், மீட்பு குழுவினருடன் குழந்தையை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசனை செய்தார். அதனை தொடர்ந்து மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டது மாநில பேரிடர் மீட்பு குழு. சம்பவ இடத்திற்கு அருகில் ஆம்புலன்ஸ் உடன் காத்திருந்த மருத்துவ குழு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்ட மாநில பேரிடர் குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் அப்பகுதி மக்கள், குழந்தையின் உறவினர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.