கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் சித்தமனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த பெண் ககனஸ்ரீ. இவர் பெற்றோரின் எதிர்ப்பினை மீறி வேறு சாதி இளைஞரைக் காதலித்துள்ளார்.
இந்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கோவில், திரையரங்கு என தனது மகளை அழைத்துச் சென்றும் நகைக் கடைக்கு அழைத்துச் சென்றும் தங்க மோதிரத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பின் வேற்று சமூக இளைஞரைக் காதலிப்பதைக் கைவிடும்படி கூறியுள்ளார். பலமுறை சொல்லியும் மகள் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த ஓம்காரப்பா நள்ளிரவு வீடு திரும்பும்போது தனது மகளை துங்கபத்ரா ஆற்றில் தள்ளி விட்டுள்ளார்.
மகள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் ஓம்காரப்பா அங்கிருந்து திருப்பதிக்குச் சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 31 அன்று காணாமல் போனார் என ககனஸ்ரீயின் தாயார் மற்றும் சகோதரர் குடந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் பெண் காணாமல் போன அன்றிலிருந்து அவரது தந்தையும் வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது மகளைத் தனது நண்பனின் உதவியுடன் ஓம்காரப்பா ஆணவக்கொலை செய்துள்ளதைக் கண்டு பிடித்தனர்.
திருப்பதி சென்ற ஓம்காரப்பா தனது செல்பேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கொப்பல் நகரில் தலைமறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த காவல்துறையினர் பெல்லாரி அழைத்து வந்தனர். அங்கு அவரை விசாரித்தபோது தனது மகளைத் தானே ஆணவக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
ஓம்காரப்பா மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். ஆற்றில் தள்ளப்பட்ட ககனஸ்ரீயின் உடல் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.