இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் (வயது 37). இவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இரு வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் டெல்லியில் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில்குமார் தரப்புக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.
படுகாயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தன்கெட் மரணத்தை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் மல்யுத்த வீரர் சுஷில்குமாரைத் தேடி வந்தனர். கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். மேலும், இவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல், சுஷில்குமார் இருப்பிடம் குறித்து துப்பு கொடுத்தால் ரூபாய் 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறையினர் அறிவித்தனர்.
இதனிடையே, தனக்கு முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் சுஷில்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.
இந்த நிலையில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சுஷில்குமாரை அதிரடியாக கைது செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சுஷில் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.