
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று 'தமிழகத்தில் தொடர்ச்சியாக தெருநாய் கடி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பதிலளித்து பேசுகையில், 'சமீப காலங்களில் தெருநாய் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் பாதிக்கப்படுவது குறித்து அரசினுடைய கவனத்திற்கு ஏற்கனவே செய்திகள் வந்திருக்கிறது. மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தெருநாய் கடித்து மாடு உயிரிழந்தால் 37,500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். ஆடு உயிரிழந்தால் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கோழி உயிரிழந்தால் 300 ரூபாய் வழங்கப்படும். இதுவரை தெரு நாய் கடியால் உயிரிழந்த 1,149 பிராணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக மொத்தம் 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது' என்றார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு இதுகுறித்து விளக்கமளித்து பேசவையில், ''தெரு நாய் பிரச்சனை தொடர்பாக நேற்று முன் தினமும் விளக்கம் கொடுத்திருக்கிறேன். வெறி நாய்களைப் பிடித்து ஊசி செலுத்த அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக சிறப்பு மனு தாக்கல் செய்து உரிய உத்தரவு கிடைக்கும் பொழுது இந்த விவகாரத்தில் தீர்வு காண அரசு தயாராக உள்ளது'' என்றார்.