தப்லீக் ஜமாஅத் அமைப்பின் இமாம் மவுலானா சாத் கந்தால்வி மற்றும் ஜமாஅத் அறக்கட்டளையோடு தொடர்புடைய சிலர் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
தப்லீக் ஜமாஅத் நிகழ்வு கலந்துகொண்ட பலருக்குக் கரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் தலைவரான மவுலானா சாத் கந்தால்வி மீது டெல்லி காவல்துறை தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மவுலானா சாத் கந்தால்வி மற்றும் ஜமாஅத் அறக்கட்டளையோடு தொடர்புடைய சிலர் மீது அமலாக்கத்துறை இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
மாநாடு மற்றும் சபைகளை ஏற்பாடு செய்வதற்காக மவுலானா சாத் கந்தால்வி பெற்ற நிதி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக மவுலானா சாத் கந்தால்வி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களின் சிலரின் வங்கிக் கணக்குகள், அவர்களுக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்த நிதி ஆகியவை குறித்து தணிக்கை செய்து ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்லீக் ஜமாஅத் மாநாடு நடத்தியது தொடர்பாக நிஜாமுதீன் போலீஸார் கடந்த மாதம் 31-ம் தேதி சாத் கந்தால்வி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது, அறக்கட்டளையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.