Skip to main content

“கோயில்கள் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கிறது” - பீகார் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை!

Published on 17/12/2024 | Edited on 17/12/2024
Bihar RJD MLA's speech creates controversy at Temples promote superstition

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபதே பகதூர் சிங். இவர், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், கோயிலுக்குச் செல்வது மூடநம்பிக்கைத் தனம் என்று இவர் கூறியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. 

பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ ஃபதே பகதூர் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சமூகத்தில் இன்று இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று கோயிலுக்குச் செல்வது, மற்றொன்று பள்ளிகளுக்குச் செல்வது. கோயில்கள் மூடநம்பிக்கை, பாசாங்குத்தனம் மற்றும் அறியாமை ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன. ஆனால், பள்ளிகள் தரமான அறிவு, அறிவியல் சிந்தனை மற்றும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன. கோயிலுக்கு அனுப்புவதற்கு பதிலாக குழந்தைகளை மக்கள் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். தங்கள் குழந்தைகள், கோயில்கள் அல்லது பள்ளிகள் என எங்கு அனுப்புவது என்று தேர்ந்தெடுக்கும் நேரம் இது. 

இந்து மத நூல்கள் பெரும்பான்மை மக்களை, ‘இந்துக்கள்’ என்று குறிப்பிடாமல் சூத்திரர்கள் என்று குறிப்பிடுகின்றன. பிராமணியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஷத்ரியர்களாக வகைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சேவை செய்தவர்கள் வைஷ்ணவர்கள் ஆனார்கள், அவர்களின் நம்பிக்கைகளை நிராகரித்தவர்கள் சூத்திரர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். உண்மையில் மனிதர்கள் அனைவரும் சமம். மனிதநேயமே உயர்ந்த மதிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார். இவரது பேச்சுக்கு பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்