பசு பராமரிப்பிற்காக ஒதுக்கிய 500 கோடி ரூபாயை குஜராத் அரசு இன்னும் விடுவிக்காததால் பசு காப்பகங்களை நடத்தும் தன்னார்வலர்கள் சாலைகளில் பசுக்களை திறந்துவிட்டனர்.
குஜராத்தில் சுமார் 1500 பசு காப்பகங்கள் உள்ளன. அனைத்து பசு காப்பகங்களிலும் சேர்த்து 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பசுக்கள் உள்ளன. நாள் ஒன்றிற்கு ஒரு பசுவிற்கு சுமார் 60 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வரை செலவாகிறது என்றும் கொரோனா பேரிடர் வேறு வந்ததால் என்ன செய்வதென தெரியாமல் இருக்கின்றோம் என பசு பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.
மேலும் நன்கொடையும் கிடைக்காமல் அரசின் உதவியும் கிடைக்காமல் இருந்த பசு பாதுகாவலர்கள் வடக்கு குஜராத்தில் 1000க்கும் அதிகமான பசுக்களை சாலைகளில் திறந்துவிட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாவ் நகர் பகுதியில் அரசு அலுவலகத்திலும் பசுக்கள் புகுந்தன.
இது குறித்து வெளியான வீடியோ பதிவில், ஆயிரத்திற்கும் அதிகமான பசுக்களுடன் பசு காவலர்கள் அரசு அலுவலகங்களின் முன் போராட்டம் நடத்துகின்றனர். அலுவலகத்தின் கதவுகளை முற்றுகையிட்டு கதவுகள் திறக்கப்பட்டவுடன் ஆயிரத்திற்கும் அதிகமான பசுக்கள் அலுவலக வளாகத்தில் புகுந்தது. மேலும் அலுவலகத்திற்கு உள்ளும் பசுக்கள் இருக்கின்றன.