தங்களுக்கு நிழல் கொடுத்த செல்ல மரத்துக்காக மாணவர்களும், ஆசிரியர்களும் மவுன அஞ்சலி செலுத்திய நிகழ்வு வைரலாகி இருக்கிறது.
அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்தின் பிங்குவார்கார் உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் குடைபோல் விரிந்து மதிய வேளைகளில் பல மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிழல் கொடுத்த 30 வயதான மரம், தனது சொந்த எடையைத் தாங்க முடியாமல் முறிந்து சாய்ந்தது.
இது அந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேதனை அளித்தது. அந்த மரத்திற்கு உயிர் கிடைக்குமா என்பது தெரியவில்லை. முறிந்த மரத்தை ஒட்டி உயிர்கொடுக்க தாவரவியல் நிபுணர்கள்தான் யோசனை தர வேண்டும் என்ற நிலையில், முறிந்து விழுந்த மரத்துக்காக காலை அணிவகுப்பு நேரத்தை அஞ்சலிக்கூட்டமாக மாற்ற பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நடைபெற்ற அஞ்சலிக் கூட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.