பஞ்சாப் மாநில காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
இந்தநிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தான் முதல்வராக இருந்தபோது செய்த சாதனைகளை வெளியிட்டார். மேலும் 2017 தேர்தலில் தான் அளித்த வாக்குறுதிகளில் 92 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயர் மற்றும் சின்னத்திற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், ஆணையம் அனுமதி அழைக்கப்பட்டதும் கட்சியின் பெயரும், சின்னமும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ள அமரீந்தர் சிங், எங்களுடன் நிறைய தலைவர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பாஜகவிற்கு பிரச்சனைகளைப் பொறுத்து ஆதரவளிக்கப்படும் என தெரிவித்த அமரீந்தர் சிங், விவசாயிகளுக்குச் சாதகமாக வேளாண் சட்ட பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தால் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்ளத் தயார் எனக் கூறியுள்ளார்.
அதேபோல் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் எங்கு போட்டியிட்டாலும், தங்கள் கட்சி அங்கு போட்டியிடும் என கூறிய அமரீந்தர் சிங், அகாலி தளம், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை தோற்கடிக்க ஒரு ஒருங்கிணைந்த கூட்டணியை அமைக்க முயற்சி செய்வேன் எனவும் கூறியுள்ளார்.