புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் அருகில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் எம்.பி வைத்தியலிங்கம், முன்னாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிலிண்டருக்கும், காய்கறிக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செய்து நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி ஒன்று கூட நிறைவேற்றவில்லை. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து ரூ. 15 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் ரூ. 45 லட்சம் கோடி கடனாக வாங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 19 சதவீதம் பேர் தான் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர். ஆனால், தற்போது 40 சதவீதத்துக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி அரசில் மக்களுக்கான எந்த திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்னால் சட்டமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.