இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன்தினம் (05-02-24) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றினர்.
இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி இன்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அதில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது ஆட்சிக் காலத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அப்போதைய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த கடிதத்தில், 'பணிகளில் எந்த வகையான இட ஒதுக்கீட்டையும் நான் விரும்பவில்லை. அதனை ஊக்குவிக்கும் எந்த முயற்சியையும் நான் எதிர்க்கிறேன். திறமையின்மை மற்றும் இரண்டாம் நிலை தரத்திற்கு வழிவகுக்கும் எதையும் நான் கடுமையாக எதிர்ப்பேன். இட ஒதுக்கீடு திறனின்மையை ஊக்குவிக்கும். அது சாதாரணமானவர்களை பணியில் அமர வைக்கும்' என்று எழுதியிருந்தார்.
பணியில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் அது அரசாங்க பணிகளின் தரத்தை குறைக்க செய்யும் என்று நேரு கூறியிருக்கிறார். இதர பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்காத காங்கிரஸ் சமூக நீதி பற்றி உபதேசம் செய்யக்கூடாது. அதனால்தான் அவர்கள் பிறப்பால் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்று சொல்கிறேன்.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிக பங்களிப்பை வழங்குவதில் எப்போதும் எதிராக செயல்பட்டிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளை அழிக்க அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்குவதைக் கூட பரிசீலிக்கவில்லை. பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபோது தான் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு பழங்குடி பெண்ணை இந்திய குடியரசுத் தலைவராக்கி உள்ளது. ஆனால், இப்போது சமூக நீதி பற்றி பாடம் எடுப்பதும், பிரசங்கம் செய்வதுமாக உள்ளனர்" என்று கூறினார்.