யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புத் தொகையை எடுப்பதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய கடன் நிலுவைகளை நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் மூலம் செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புத் தொகையை எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈ.எம்.ஐ மற்றும் கிரெடிட் கார்ட் நிலுவைத் தொகைகளை இதர வங்கிக் கணக்குகளிலிருந்து நெப்ட் மூலம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.