இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பரபரப்பு நிலவி வருகிறது. அவ்வப்போது எதிர்க்கட்சிகளின் அமளியில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் தற்போது மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மக்களவையில் காங்கிரஸ் கட்சி, வேளாண் போராட்டத்தில் விவசாயிகள் இறந்த விவகாரத்தை எழுப்ப முயன்றது.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்படவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதி வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னரும் அமளி நீடிக்கவே மக்களவையும் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.