300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை கடும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது.
குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டம், துடாப்பூர் கிராமத்தில் நேற்று (08/06/2022) இரவு கூலி தொழிலாளி தம்பதியின் ஒன்றரை வயது மகனான சிவம், அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். நேற்று (08/06/2022) இரவு 08.00 மணியளவில் அந்த குழந்தை அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதே நேரம், 20 அடி முதல் 25 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் உள்ளூர் பேரிடர் மேலாண்மை மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரை வரவழைத்தனர். இதனை தொடர்ந்து, ராணுவம் மற்றும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் ஒருங்கிணைந்து ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
பின்னர், அந்த குழந்தை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது.