அண்மையில் திருப்பதியில் காட்டு வழியாகச் சென்று சிறுமி புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது திருப்பதியில் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பார்வையாளர் ஒருவர் சிங்கம் தாக்கி உயிரிழந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சுந்தரி, குமார் தெங்கள்பூர் உள்ளிட்ட இரண்டு ஆண் சிங்கங்களும், ஒரு பெண் சிங்கமும் உள்ளது. பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு நாளும் சிங்கங்கள் பாதுகாப்பு கூண்டில் இருந்து காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வளாகத்திற்குள் இன்று திறந்துவிடப்பட்டது. அப்போது ஒருவர் செல்பி எடுப்பதற்காக முயன்றபோது சிங்கம் நடமாடும் வளாகத்திற்குள் தவறி விழுந்தார். அவரது ஆடைகளைக் கடித்துக் குதறிய சிங்கம் அவரது கழுத்தையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த வெளியே இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு மரத்தில் ஏறித் தப்ப முயன்றபோதும் விடாத சிங்கம் அவரைத் தாக்கிக் கொன்றது.
இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஊழியர்கள் அதனைக் கூண்டில் அடைத்தனர். அந்த நபரின் உடல் கைப்பற்றப்பட்டது. சிங்கத்தின் தாக்குதலால் உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் குருஜாலா பிரகலாதா என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.