உத்தரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று பீம் ஆர்மி அமைப்பு தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவண் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவராக இருப்பவர் சந்திரசேகர் ஆசாத் ராவண். இவர் நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தியோபந்த் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம கும்பல் சந்திரசேகர் ஆசாத் வந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் ஒரு குண்டு சந்திரசேகர் ஆசாத்தின் வயிற்றில் பாய்ந்துள்ளது. மீதி நான்கு குண்டுகளும் காரின் கதவில் பாய்ந்துள்ளன. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஆசாத்தின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து ஆசாத் தியோபந்த் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையே ஆசாத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பீம் ஆர்மி, உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்திரசேகர் ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்றைய தினம் என் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்து கண்டனமும் என் மீது அனுதாபமும் தெரிவித்த எனது நண்பர்கள், தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு ஜாதி, மத அடிப்படையில் அரசு பாதுகாப்பு அளிக்கிறது. அதனால் இன்று அவர்கள் சட்டத்திற்கும், காவல்துறைக்கும் பயப்படுவதில்லை.
இன்று இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பாபாசாகேப்பின் அரசியலமைப்பு இரண்டுமே ஆபத்தில் உள்ளன. என்னைப் போன்ற அரசியல்வாதிகளின் குரல்களை அடக்க அரசு வெளிப்படையாக பல துப்பாக்கிக் குண்டுகளை வைத்து பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மீது அடக்குமுறைகள் மற்றும் அட்டூழியங்களை நிகழ்த்தி வருகிறது.
இதற்கு முன்பு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்திய இவர்கள், அதன் பிறகு போலி போலீஸ் என்கவுன்டர்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை ஒழிக்க ஆரம்பித்துள்ளனர். என் மீதான கொடிய தாக்குதலை அரசின் தோல்வியாகத்தான் பார்க்க முடிகிறது. ஏனென்றால் மாநில மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பாகும். நானும் மாநிலத்தின் பொறுப்புள்ள குடிமகன். மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசு தார்மீகப் பொறுப்பேற்று, முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.