ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீடுல் மாவட்டத்தில் மாண்ட்வி என்னும் கிராமம் உள்ளது. இங்கு கடந்த வியாழன் அன்று மாலை 5 மணியளவில் 8 வயது சிறுவன் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதி கடினமான பாறைகளைக் கொண்ட பகுதி என்பதால் சிறுவனை மீட்க அமைக்கப்படும் சுரங்கப்பாதை தோண்டுவதில் தொய்வு ஏற்பட்டது.
எனினும் தொடர்ந்து 4 நாட்களாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் ஆக்ஸிஜன் தொடர்ச்சியாக ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே செலுத்தப்பட்டு வந்தது. 4 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு இன்று (10/12/22) காலை 5.30 மணியளவில் சிறுவன் இன்று மீட்கப்பட்டான்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு நிவாரணமாக 4 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியப் பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.