Skip to main content

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைக்க தயார்- மாநில தேர்தல் ஆணையம் பதில் 

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் என மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வார்டு மறுவரையறை முடிந்தவுடன்தான் தேர்தல் அறிவிக்கவேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

 

 Ready to hold elections in other districts excluding 9 Districts - State Election Commission

 

இன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது. திமுகவைவிட அதிக கேள்விகளை நீதிபதிகள் தமிழக அரசிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் வைத்துள்ளனர். தொகுதி மறுவரையறைகளை முழுமையாக முடித்துவிட்டீர்களா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு ஆம், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறைகளை முடித்திருக்கிறோம் என  மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அப்படி என்றால் புதிய மாவட்டங்களை பிரித்து ஏன்? பிரித்ததற்கான நடைமுறைகளை பின்பற்றினீர்களா? குறிப்பாக இடஒதுக்கீடு முறைகளை சரியாக செய்திருக்கிறீர்களா என்ற கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அதை இப்பொழுது செய்யவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொண்ட தொகுதி மறுவரையறை பணிகளை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் நீபதிகளுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை எனவே அந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திமுக தரப்போ இல்லை தள்ளிவைத்தால் மொத்தமாக தள்ளிவைக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தது.

அதனையடுத்து புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளிவைக்கலாமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என மதியம் 2 மணிக்கு பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. அதில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை (காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர்) தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் என மாநில தேர்தல் ஆணையமும்  பதிலளித்தது. தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்