குஜராத்தில் கெமிக்கல் ஆலை அருகே மான்கள், பறவைகள செத்துக்கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாவ்நகரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள பால் பகுதியில் உள்ள கெமிக்கல் ஆலை அருகே ப்ளாக் பக் இனத்தைச் சேர்ந்த ஐந்து மான்கள் சந்தேகத்திற்கு இடமாக இறந்துகிடந்தன. அதேபோல், பத்துக்கும் மேற்பட்ட பறவைகளும் அதே பகுதியில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
பாவ்நகரில் உள்ள பால் பகுதி மான்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான மான்கள் சுற்றித்திரிவது வழக்கம். இங்குள்ள கெமிக்கல் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக்கழிவுகள் கலந்த நீரை பருகிய மான்களும், பறவைகளும் உயிரிழந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இறந்த உடல்களைக் கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே, உயிரினங்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.