
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 63 நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது.
இந்நிலையில் குடியரசு தினமான நேற்று (26.01.2021) விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி காலை அமைதியாக ஆரம்பித்தாலும் மாலை வன்முறையில் முடிந்தது. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு என போர்க்களமாக தலைநகர் டெல்லி காட்சியளித்தது. டெல்லி எல்லையில் சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் அணிவகுத்து நின்றன. இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.
அதேபோல் காவல்துறையினர் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இப்படி குடியரசு தினத்தின் பிற்பாதியில் போராட்டத்தால் ஸ்தம்பித்தது டெல்லி. இந்நிலையில் போராட்டம் காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.