மகாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நேற்று அம்மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அம்மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், நவம்பர் 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே நிறைய தியாகம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க கூறியுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவான்குலே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே திறந்த மனதுடன் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். கூட்டணியை நிலைநிறுத்த நாங்களும் தியாகம் செய்துள்ளோம். நாங்கள் முன்பு வகித்த தொகுதிகளில், பாஜக போட்டியிடுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
மஹாயுதி கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்பதால், பா.ஜ.க அதிக இடங்களைத் தேடி போட்டியிடுவது இயற்கையானது. பெரிய கட்சியாக இருக்கும் போது, தொகுதி பங்கீட்டில் அதிக பங்கு இருக்க வேண்டும். சட்டசபைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என முதல்வர் என்ற முறையில் எதிர்பார்த்திருக்கலாம். யார் பெரிய தியாகங்களை செய்தார்கள் என்பதை அளவிட முடியாது. ஆனால், கூட்டணிக்குள் பதற்றத்துடன் தேர்தலை சந்திப்பது சாத்தியமில்லை. நாங்கள் முன்பு இருந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு” என்று கூறினார்.