
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது ஆளுநரின் செயல்பாடுகள் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாகத் தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.