நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த குடியுரிமை மசோதா என்பது மத்திய அரசு ஏழைகள் மீது திணித்த வரி என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகுலின் இந்த கருத்தை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், " குடியுரிமை சட்டத்தை மக்கள் முன் தவறான முறையில் காங்கிரஸ் கட்சி கொண்டு செல்கிறது. ஆனால், மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அதனை காங்கிரஸ் கட்சியால் குலைக்க முடியாது. ராகுலின் கருத்து முட்டாள்தனமானது. அவர் இந்த ஆண்டின் சிறந்த பொய்யர்" என்றும் அவர் தெரிவித்தார்.