சுனீல் தர்ஷன் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய இந்தி திரைப்படம் 'ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா'. இப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. இந்தநிலையில் இத்திரைப்படம் யூடியூபில் வெளியாகி, அதை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் சுனீல் தர்ஷன், 'ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா' திரைப்படத்தின் உரிமையை யாருக்கும் விற்கவில்லை. அதனை வெளியிட யாருக்கும் அனுமதி தரவவில்லை எனவும், தனது திரைப்படம் கோடிக்கணக்கான காப்பிரைட் அத்துமீறல்களுடன் யூடியூபில் வெளியிடப்பட்டு, சட்டவிரோதமாகப் பெரும் அளவிலான பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்து கூகுள் நிறுவனத்திடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, யூடியூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவுதம் ஆனந்த் ஆகியோர் மீதும், கூகுள் நிறுவனத்தின் ஐந்து அதிகாரிகள் மீதும் புகாரளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மும்பை போலீஸார் சுந்தர் பிச்சை, கவுதம் ஆனந்த் ஆகியோர் மீதும், கூகுள் நிறுவனத்தின் ஐந்து அதிகாரிகள் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.