நாட்டின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் போபால் தொகுதியில் பாஜக கட்சியின் சார்பாக பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார். இவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “ஆம், நான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டப்போது அங்கு சென்றேன். அதை இடிக்கும்போது நானும் அதில் பங்குகொண்டேன். மீண்டும் நாங்கள் அங்கு சென்று ராமர் கோயிலை கட்டுவோம். அந்த பணியில் நானும் இருப்பேன். யாரும் எங்களை தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு போபால் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரக்யா சிங் தாக்கூரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஒரே நாளைக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கி இருந்த பிரக்யா சிங் தாக்கூர் தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.