வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி 22-ந் தேதி நடைபெறும்
நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, கிராமப்புறங்களில் புதிய வங்கிகளை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 22-ந் தேதி நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனால் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
அதன்படி டெல்லியில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய தொழிலாளர் துறை ஆணையர் அனில் நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பேச்சுவார்த்தையில், அதிக பணம் புழங்கும் வங்கிகள் பொதுத்துறையின் கீழேயே நீடிக்க வேண்டும், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் போன்றவற்றுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்.
வராக்கடனை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்க சட்டத்தை மாற்றியிருப்பதாக கூறினர். சேவைக்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்துள்ளனர். இதையெல்லாம் கண்டித்து கோரிக்கை வைத்தோம். அரசு எந்த முடிவுக்கும் வரவில்லை. எனவே, திட்டமிட்டபடி 22-ந் தேதி அனைத்து வங்கிகளின் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் நடக்கும். என இவ்வாறு கூறினார்.