முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (வயது 66) தனது மகனின் திருமண நிகழ்ச்சி நேற்று திருப்பதியில் (08.11.2024) நடைபெற்றது. இதில் அவர் பங்கேற்றுவிட்டு திருப்பதி மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரது உயிர் பிரிந்தது. இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கோவைக்கு கொண்டு வரப்பட்டு இன்று (09.11.2024) நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து 2015இல் அதிமுகவில் இணைந்தார். அதன்பின்னர் திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் வா. புகழேந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எமது அன்பு நண்பரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு துணிவோடு பேசுகின்ற பேச்சாற்றல் மிக்கவருமான பாசமிகு சகோதரர் கோவை செல்வராஜ் இயற்கை எய்தினார் என்கிற செய்தி கேட்டு சொல்லுனா துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
அன்னாரது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. மூன்றாவது மகனின் திருமணத்தன்று அவர் இயற்கை எய்தியது என்பது கொடுமையிலும் கொடுமையான ஒரு நிகழ்வு. அன்னாரது குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்த இயக்கத்தின் தலைவருக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.