‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சமுதாய அரசியல் சீர்திருத்த இயக்கமாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அதைத் தான் 75 வருடங்களாகச் செய்து வருகிறோம். அர்ஜுன் சம்பத் போல் அடிக்கடி வெளியில் வந்து விளம்பரம் செய்து வருபவர்கள் அல்ல. சென்னை மாகாணமாக இருந்தபோது கல்வி நிலையங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பார்ப்பனர்கள்தான் இருந்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டும்தான் டாக்டர் படிக்க விண்ணப்பம் செய்ய முடியும் என்ற நிலை அன்றைக்கு இருந்தது. இதையெல்லாம் பார்த்துத்தான் பிராமணரல்லாத இயக்கம் தோன்றியது .இந்த இயக்கம் தோன்றியதற்குக் காரணமே பிராமணர்கள் செய்த அட்டூழியம் தான். சேரன்மாதேவி குருகுல போராட்டத்தில் பள்ளி குழந்தைகளைப் பிறப்பால் வேறுபாடு பார்த்தார்கள். அதை ஒழித்துக்கட்ட அன்றைக்கு உருவானதுதான் திராவிட இயக்கம்.
அந்த வரலாற்றின் வெளிப்பாடாக இன்றைக்கு இட ஒதுக்கீடு வந்திருக்கிறது. 1947ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தேவசாமி முறை கோயில்களில் இருப்பதாகக் கூறி அதை ஆதரித்துப் பேசியவர் சத்திய மூர்த்தி ஐயர். இதையெல்லாம் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களைத் தாக்கியது கிடையாது. சூரிய நாராயண சாஸ்திரி தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இதையெல்லாம் வரவேற்றோம். பார்ப்பனர்களில் சிலர் முற்போக்கு சிந்தனையுடையவர்களாக இருந்திருக்கின்றனர். பார்ப்பனியத்தை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களைத்தான் எதிர்கின்றோம். பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை. இந்த கருத்தை ஆர்ப்பாட்ட மேடையில் பேசியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கஸ்தூரி ஒரு நடிகை அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று ஆடுவார் எப்படி வேண்டுமானாலும் குதிப்பார். ஆனால் பார்ப்பனப் பெண்கள் தங்கள் கணவனை இழந்ததால் மொட்டையடிக்கப்பட்டார்கள். பெண்களைப் பிள்ளை பெறும் இயந்திரமாக வைத்திருந்ததுதான் பார்ப்பனியம். தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் பெற்றுத்தந்த உரிமைகள் மூலமாகப் பார்ப்பனப் பெண்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவானது. திராவிடம் என்பது மரபினம். நீக்ரோக்கள், ஐரோப்பியர்கள், ஜப்பானியர்கள் உள்ளிட்ட பல மரபினர்கள் இருக்கிறார்கள். அதுபோன்ற மரபினத்தில் உருவானவர்கள்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சில சமூகங்கள். இந்த மரபினத்திற்கு பெயர்தான் திராவிடம். இறந்த பிறகு இந்த மரபினரின் உடலை எடுத்து ஆராய்ந்தால் அது திராவிட நிலத்தின் எலும்பு என்று சொல்ல முடியும். அந்த மரபினத்திற்கு அடையாளமாக மொழி இருக்கும். இதையெல்லாம் கஸ்தூரி தெரிந்துகொள்ள வேண்டும். சிதம்பரம் நடராஜன் கோயிலில் உண்டியல் வருமானக் கணக்கை முன்பு ஆயிரக்கணக்கில் ஒப்படைத்தார்கள். அரசாங்கம் நேரடியாக அந்த உண்டியல்களில் வரும் வருமானத்தைக் கணக்கிட்டபோது லட்சக்கணக்கில் இருந்தது. அந்த பணத்தையெல்லாம் திருடியது யார்? அங்குள்ள கோயில் நிலங்களை வெளி ஆட்களுக்கு விற்றது யார்? காஞ்சிபுரம் கோயில் கருவறைக்குள் தேவநாதன் செய்தது கஸ்தூரிக்குப் பிடிக்குமா? பிடிக்காத? என்று எனக்குத் தெரியாது. மரியாதைக்குரிய எழுத்தாளர் அனுராதா ரமணனின் உள்ளாடையை எங்கு கிழித்தார்கள்?
மேற்கண்ட சம்பவங்களைப் பற்றி கஸ்தூரி கேள்வி எழுப்புவாரா? உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருவதற்கு முதல் நாள், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற பகுதிக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று அங்குள்ள வீடுகளில் குளிப்பதற்கு சோப்பும் துண்டும் கொடுக்கிறார்கள். யோகி ஆதித்யநாத் வரும்போது, ஒடுக்கப்பட்ட மக்கள் குளித்துவிட்டு அவரை தூரத்தில் நின்று பார்ப்பதற்கு அந்த காரியங்களை அரசு அதிகாரிகள் செய்திருக்கின்றனர். யோகி ஆதித்யநாத் போன்ற ஆள்கள் தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்று கஸ்தூரிக்கு ஆசை இருக்கலாம். ஆனால் ஆரியத்தை திராவிட மாடல் ஆட்சி உள்ளே விடாது. ஆரியத்தை அடியோடு அழிக்கும் . மேடையில் கஸ்தூரி, கத்தி பேசுவதற்கு காரணம் பா.ஜ.க. என்ற பாசிசம்தான் காரணம். தமிழ், தமிழர்கள், திராவிடர்களைப் பற்றிப் பேச கஸ்தூரிக்கு தகுதி கிடையாது.