விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் (09.11.2024), நாளையும் (10.11.2024) கலந்துகொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தபோது விருதுநகரில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது காப்பகத்தில் உள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின் போது மாணவிகளிடம் காப்பகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்காப்பகத்தில் தங்கியுள்ள மாணவியர்களுக்கு தான் வாங்கி வந்த கேக், பிஸ்கட்டுகள் மற்றும் பழங்களையும் வழங்கினார். இறுதியாக மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் பேசுகையில், “முதல்வர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். நாம் ஆசைப்படுவது ஆசையாக இருந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் முதல்வர் நம்முடன் நிற்கிறார். முதல்வர் இங்கு வந்து நம்முடன் நிற்கிறார் என்று நினைக்கும் போது, ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. நம்மை பார்க்க வந்தது மட்டுமில்லாமல், நம்மை அவருடைய குழந்தைகளாக நினைத்து இனிப்புகள் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இதனை நாம் வார்த்தைகளால் சொல்லவே முடியாது.
எங்களை பார்க்க வந்ததற்கு எங்கள் பெற்றோர் பெற்றோர் மாதிரி அப்பா என்று சொன்னதும் அந்த ஸ்மைல்...” என மாணவி கூறிக் கொண்டிருக்கும்போதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ந்து சிரித்தார். இதனையடுத்து மாணவி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அப்பா… நிறைவான நாள்” எனக் குறிப்பிட்டு மாணவியின் பேச்சை காணொளியாகப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.