அசாம் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பிரம்மப்புத்திரா உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகள் அனைத்தும் அபாயக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநிலத்தில் தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார் உள்ளிட்ட 17 மாவட்டங்களில், 1556-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளன. அங்கு வசிக்கும் சுமார் 8.69 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இன்னும் மழை தொடர்ந்தால் பாதிப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. அசாம் மாநிலத்தை தொடர்ந்து உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.