நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூபாய் 2 ஆயிரம் கோடி சொத்துக்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, மத்திய அமலாக்கத்துறை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. எனினும், சோனியா காந்திக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக மேலும் சில நாட்கள் அவகாசம் கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி., டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
அவரிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளைச் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், இன்று (13/06/2022) நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரகப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இருப்பினும், திட்டமிட்டபடி இன்று காலை சத்தியாகிரக பேரணி நடத்தப்படும் என்றும் கட்சியினர் அனைவரும் தலைமை அலுவலகத்துக்கு வரும்படியும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுப்பட்டது.
தடையை மீறி ஏராளமானோர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிரான கட்சித் தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.