Arvind Kejriwal said Nitishkumar's move to BJP is a strength of India Alliance

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 24 ஆம் தேதி அறிவித்தது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, நேற்று (28-01-24) காலை தனது பதவியை ராஜினாமா செய்து, மாலையில் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக அணி மாறியுள்ள நிதிஷ்குமார், தற்போது ஒன்பதாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (29-01-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பா.ஜ.க கூட்டணி பக்கம் சென்றிருக்கக் கூடாது என நினைக்கிறேன். அவர் செய்தது தவறானது. இது ஜனநாயகத்திற்கு சரியல்ல. அவர் பா.ஜ.க பக்கம் சென்றதால் பீகாரில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் பாதிப்பே தவிர, இந்தியா கூட்டணிக்கு பலன் தான்” என்று கூறினார்.