இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி இன்று (22.12.2021) காலை நிறைவடைந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி, தேசவிரோதம் தொடர்பான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், எது தேசவிரோதம் என்பது சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நித்யானந்த் ராய், “‘தேச விரோதம்’ என்ற வார்த்தை சட்டங்களில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் சட்டவிரோதமான மற்றும் நாசகார நடவடிக்கைகளைக் கடுமையாகக் கையாள்வதற்குக் குற்றவியல் சட்டங்களும் பல்வேறு நீதித்துறை தீர்ப்புகளும் உள்ளன" என தெரிவித்துள்ளார்.
மேலும், அவரசரநிலையின்போது கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் (42வது திருத்தச்) சட்டம் 1976இன் மூலம் இணைக்கப்பட்ட 31டி பிரிவில், தேசவிரோத செயல்கள் வரையறுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அரசியலமைப்புச் (43வது திருத்தச்) சட்டம் 1977 மூலம் 31டி பிரிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ள நித்யானந்த் ராய், பொது ஒழுங்கு மற்றும் காவல்துறை என்பது மாநிலங்களின் பொறுப்பு என்றும், எனவே தேசவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு பராமரிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.