தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில் இருந்த மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.