
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்கிற அச்சத்தில் எல்லோரும் உள்ளனர். இதுமட்டும் அல்லாது வருகின்ற நவம்பர் 4 அடுத்து இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த நெருக்கடிக் காரணமாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா மந்திரி அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் இந்தியாவில் இருக்கும் நெருக்கடி நிலையை எவ்வாறு சமாளிக்கலாம், எவ்வகை புதிய திட்டங்களை கொண்டு பிரச்சனைகளை சீர் செய்யலாம் என்று ஆலோசனை மேற்கொள்வார்கள், எனத் தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் வைப்பது இது மூன்றாவது முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.