மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அர்ச்சகர் உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, ஏராளமான மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அர்ச்சர்கள் உடைகளை அணிந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவை, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆண் போலீசார் வேட்டி மற்றும் குர்தாவிலும், பெண் போலீசார் சல்வார் குர்தாவிலும் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவில் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது, “காவல்துறை கையேட்டின்' படி காவலர்கள் அர்ச்சகர் போல் வேஷம் அணிவது சரியா? இப்படி உத்தரவு பிறப்பிப்பவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நாளை, இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அப்பாவி பொதுமக்களை யாராவது சூறையாடினால், உ.பி அரசும், நிர்வாகமும் என்ன பதில் சொல்லும்? இந்த முடிவு கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.
पुजारी के वेश में पुलिसकर्मियों का होना किस ‘पुलिस मैन्युअल’ के हिसाब से सही है? इस तरह का आदेश देनेवालों को निलंबित किया जाए। कल को इसका लाभ उठाकर कोई भी ठग भोली-भाली जनता को लूटेगा तो उप्र शासन-प्रशासन क्या जवाब देगा।
निंदनीय! pic.twitter.com/BQUFmb7xAA— Akhilesh Yadav (@yadavakhilesh) April 11, 2024