இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். அதேபோல லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாகத் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.