மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் கட்சியின் கிளைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் திரிணாமூல் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைத் திரிணாமூல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்துவருகிறது. இவ்வாறு திரிணாமூல் காங்கிரஸில் இணைபவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு கட்சிகளிடையே மோதல் வெடித்துள்ளது.
இந்தநிலையில், மேகாலயா மாநிலத்தில் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 11 பேர், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் எம்.எல்.ஏவுமான முகுல் சங்மாவின் தலைமையில் நேற்று (24.11.2021) இரவு திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாக திரிணாமூல் மாறியுள்ளது.