உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.
அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.
இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகில் பல்வேறு மூலைகளிலும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளுக்கான ஆய்வுகள் அனுதினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அதற்கான முழு தீர்வு எட்டப்படவில்லை என்றே கூறலாம்.
இந்நிலையில், மும்பையின் டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். எலிகளை வைத்து நடைபெற்ற மருத்துவச் சோதனையில் அந்த மருந்து வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஏற்படும் பக்க விளைவுகளை 50% குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர் பிளஸ் சியூ என்ற அந்த மாத்திரை, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக புற்றுநோய் மருத்துவம் என்றாலே விலை உயர்ந்தது என்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நூறு ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளதுதான்.