இந்தியாவின் 18 வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19 ஆம் தேதி முதற்கட்டமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு மூன்று கட்டங்களை நிறைவு செய்துள்ளது. அடுத்தகட்டமாக நான்காம் கட்ட வாக்குப்பதிவு வரும் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே பாஜக தலைமையிலான என்.டி.ஏ அணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா அணியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உ.பி மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸின் இந்தியா கூட்டணியில் இணைந்து களம் காண்கிறது. இதில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கன்னுஜ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிக்கு 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் கன்னுஜ் தொகுதியில் உள்ள சித்தாபீத் பாபா கௌரி சங்கர் மகாதேவ் கோவிலுக்குச் சென்று பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். அதன்பிறகு தனது தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். இதையடுத்து கோவிலில் அகிலேஷ் யாதவ் வழிபட்டுவிட்டுச் சென்றதும், கோவில் வாளாகத்தை கங்கை நீரைக் கொண்டு பாஜகவினர் சுத்தம்செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கமளித்த பாஜகவினர், “கோவிலுக்கு அகிலேஷ் யாதவுடன் முஸ்லிம்களும் வந்தனர். அவர்கள் ஷூ அணிந்தபடியே வளாகத்திற்குள் நுழைந்தனர். அதனால்தான் அந்த இடதை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்தோம் எனத் தெரிவித்தனர். ஆனால் சமாஜ்வாதி கட்சியினர், “அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் பாஜகவினர் கோவில் வளாகத்தைக் கங்கை நீரை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். முன்னதாக யோகி பிரதமராக பதவியேற்றபோதே, லக்னோவில் உள்ள முதல்வர் அலுவலகத்தை பாஜகவினர் கங்கை நீரால் கழுவினர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.