கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் அவையிலிருந்த அனைவரும் குரல் எழுப்பினர். குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒட்டுமொத்தமாகத் தோல்வியில் முடிந்தது என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் மீண்டும் மீண்டும் விதிகளை மீறிச் செயல்பட்டதாக கூறி அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற குழு பரிந்துரையின் அடிப்படையில் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.