பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் உள்ள மாஞ்சி தோலாவிய கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த கிராமத்தில் உள்ள 80 வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அப்போது கிராமத்தினர் சிலர் வெளியே வந்து பார்த்த பிறகு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தெரியவர, உடனடியாக கத்தி கூச்சலிட்டதால் வீடுகளில் இருந்து பலரும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடிப் பற்றி எரிந்த தீயை இரவு 11 மணியளவில் அணைத்தனர். ஆனாலும் அதற்குள் 21 வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 15 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே வீடுகள் கொளுத்தப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடந்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்று கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் திமான் சம்பந்த இடத்தை சோதனையிட்டபோது ஒரு தோட்டாக்கள் கூட கிடைக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவிதமான காயம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நேரில் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஏராளமாக போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.