இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை கண்ட பலரும் தங்களது கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “தெய்வீகத்தின் மத்தியில் வறுமை.., வறுமை ஒருவரை விளக்குகளில் இருந்து எண்ணெய்யை எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்தினால், அந்த கொண்டாட்டத்தின் ஒளி மங்கலாகிறது. இது போன்ற திருவிழா வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஆனால், அதில் கிடைக்கும் வெளிச்சத்தால் இது போன்ற இடங்கள் மட்டுமல்ல, ஏழைகளின் வீடுகளிலும் ஒளிர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, மற்றொரு பதிவில் ஒரு பெண் விளக்குகளில் இருந்து எண்ணெய்யை சேகரிக்கும் போது காவலர் ஒருவர் அவரை மிரட்டுவதும், அப்பெண் அக்காவலரை கையெடுத்து கும்பிடும் காட்சிகளை பகிர்ந்த அகிலேஷ் யாதவ், “அப்பெண் உதவியற்றவர் என்பதால் கைக்கூப்பி அனுமதி கேட்கிறார். ஏழைகளின் திருவிழா எப்போது? என்று பதிவிட்டுள்ளார்.