Skip to main content

உத்தரப்பிரதேசத்தில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
6 Defense Force personnel incident in Uttar Pradesh

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் நாளை (01.06.2024) நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து நேற்று (30.05.2024) மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்தது. ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே வட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பாதுகாப்புப் படையினர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மிர்சாபூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பி.லால் கூறும்போது, “மருத்துவமனைக்கு மொத்தம் 23 பாதுகாப்புபடை வீரர்கள் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு உயர்நிலையிலான காய்ச்சல் இருந்தது.

மேலும் படை வீரர்களின் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தது, அவர்கள் இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு அவர்கள் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், பணியில் இருந்த இரண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்ப தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்று கூறபடுகிறது. அதே சமயம் பீகார் மாநிலத்திலும் வெயில் தாக்கம் காரணமாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் அதிக வெப்பத்தால் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த சோகம்; உ.பியில் வன்முறை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tragedy befell a listed youth in custody in uttar pradesh

போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞரை போலீசார் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவரை திருட்டு வழக்கில் போலீசார் கடந்த 19ஆம் தேதி கைது செய்தனர். மேலும், ஆகாஷ் பிடியில் இருந்த இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

போலீஸ் காவலில் இருந்த ஆகாஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், அவரை கடந்த 21ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷை போலீசார் சித்ரவதை செய்ததால்தான் அவர் உயிரிழந்தார் என்று ஆகாஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில், ஆகாஷின் உடலை போலீசார் கைப்பற்றி அவரது வீட்டிற்கு கொண்டு சென்றபோது, ஆகாஷின் உறவினர்கள் போலீசாரைத் தாக்கி அவர்களுடைய வாகனத்திற்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ஆகாஷின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கையும், பிற விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினர். போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

படுத்தபோது ஆண், எழுந்தபோது பெண்! - இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
gender reassignment without his consent in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சஞ்சக் கிராமத்தைச் சேர்ந்தவர் முஜாகித் (20). இவரை ஓம்பிரகாஷ் என்ற இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டியும், துன்புறுத்தியும் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், முஜாகித்துக்கு மருத்துவ பாதிப்பு உள்ளது என்றும், அதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் ஓம்பிரகாஷ் கூறியுள்ளார்.

ஓம்பிரகாஷ் பேச்சை நம்பி,  பேக்ராஜ்பூர் என்று மருத்துவக் கல்லூரிக்கு ஓம்பிரகாஷுடன் முஜாகித் சென்று சிகிச்சை மேற்கொண்டார். அப்போது, ஓம்பிரகாஷ் உதவியோடு, மருத்துவ ஊழியர்கள் முஜாகித்துக்கு மயக்க மருந்து கொடுத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சை முடிந்ததும், சுய நினைவு திரும்பிய  போது, தன்னுடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருப்பதையும், தான் ஒரு பெண்ணாக மாறியிருப்பதைக் கண்டு முஜாகித் அதிர்ச்சியடைந்தார். 

இந்தச் சம்பவம் குறித்து முஜாகித்தின் தந்தை கடந்த 16ஆம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பெண்ணாக மாறியிருந்த முஜாகித்திடம், ‘உன்னைப் பெண்ணாக மாற்றிவிட்டேன்.  நீ என்னுடன் தான் இனி வாழ வேண்டும். லக்னோவுக்கு அழைத்துச் சென்று உன்னைத் திருமணம் செய்யப்போகிறேன். ஒருவேளை அதற்கு நீ சம்மதிக்காவிட்டால், உன் தந்தையைக் கொலை செய்துவிடுவேன்’ என்று ஓம்பிரகாஷ் மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, வலுக்கட்டாயமாக முஜாகித்தை பாலின மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஓம்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவ ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.