Skip to main content

“துரோகி என்றால் பழனிசாமி பெயர் தான் ஞாபகம் வரும்...” - டிடிவி தினகரன் விளாசல்!

Published on 23/02/2025 | Edited on 23/02/2025

 

TTV Dhinakaran says When I think of a traitor, the name Palaniswami comes to mind

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், “அதிமுக கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கட்சியைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?. களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா?. விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?. முடியாது, முடியாது என்று  முழங்குவது கேட்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

அதே சமயம் சென்னை அடையாற்றில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று (23.02.2025) நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு கொடியேற்றி  கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை குறித்துப் பேசுகையில், “ஏதோ லாட்டரி சீட்டு போலக் குருட்டு யோகத்தில் பதவிக்கு வந்துவிட்டு துரோகத்திற்கு ஒரு சின்னம் (Emblem) போட வேண்டும் என்றால் பழனிச்சாமி தான் என்கிற அளவிற்கு என்பதற்குத் தமிழ்நாட்டில் மக்களுக்குத் தெரிந்துள்ளது. முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுமாதிரி வருங்காலத்தில் பழனிச்சாமியின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துரோகி என்றால் பழனிச்சாமி பெயர் ஞாபகம் வருகின்ற அளவுக்குச் செயல் கொண்டிருப்பவர் ஆவார். அவரே தெரியாமலேயே தான் தான் அந்த துரோகி அப்படித்தான் என்று ஒத்துக் கொண்டு உள்ளார் என்று தான் இதைப் பார்க்கிறேன்” எனப் பேசினார்.

சார்ந்த செய்திகள்