
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதிகளை மத்திய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 20ஆம் தேதி (20.02.2025) கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் (21.02.2025) கடிதம் எழுதியிருந்தார். அதில், “தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். எனவே கல்வியை அரசியலாக்க வேண்டாம். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாணவர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியைத் திணிப்பது என்ற கேள்விக்கே இடம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (23.02.2025) காலை 7 மணி அளவில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இடம்பெற்றிருந்த “பொள்ளாச்சி சந்திப்பு” என்ற இந்தி எழுத்துக்களை திமுக சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்தனர். அப்போது, “தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம், மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என முழக்கமிட்டனர். அப்போது திமுக நகர மன்ற உறுப்பினர் பி.ஏ.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல், மாவட்ட மாணவரணியின் முன்னாள் அமைப்பாளர் தனம் தங்கதுரை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அவினாஷ் கார்த்திக், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பைக் பாபு, ஸ்ரீரங்கன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.