Skip to main content

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 5 மாநில தேர்தல் தேதி; காத்திருக்கும் அரசியல் கட்சிகள்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

n

 

இந்திய தேர்தல் ஆணையம் இன்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இருக்கிறது.

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த வாரம் மாநில தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி இருந்தது. ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் இதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேதிகளை அறிவிக்க இருக்கிறது தேர்தல் ஆணையம்.

 

ஐந்து மாநிலப் பேரவை ஆயுட்காலம் நிறைவடைய உள்ளதால் அடுத்த மாதத்திலிருந்து டிசம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முன்னோட்டமாக இருக்கும். தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சியும் ஆட்சி நடத்துகின்றன. எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணி என்ற பெயரில் ஒன்றுபட்டுள்ள நிலையில் நடக்க இருக்கும் இந்த முதல் தேர்தலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் 5 மாநிலங்களிலும் வெற்றி பெறும் உத்தியுடன் காங்கிரஸ் களமிறங்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதேபோல் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்